ஒருசமயம் சிவபெருமான் மற்றும் பார்வதியுடன் ஏற்பட்ட கோபத்தால் முருகப்பெருமான் கிரௌஞ்ச மலைக்கு வந்து தங்கினார். இது ஸ்ரீசைலம் அருகில் உள்ளது. குமரக் கடவுளை சமாதானம் செய்ய சிவனும், பார்வதியும் ஸ்ரீசைல மலையில் வந்து தங்கினார். பின்னர் முருகப் பெருமான் கோபம் தணிந்து இம்மலையிலேயே தங்கி அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, இறைவனும், இறைவியும் அவ்வாறே அருளினர். முருகப்பெருமானும் கிரௌஞ்ச மலையில் தங்கி அருள்பாலித்தார்.
சந்திரவதி என்னும் பெண் மல்லிகை மலர்களால் இத்தலத்து இறைவனை அர்ச்சித்து வழிபட்டு முக்தி அடைந்ததாலும், அர்ஜுன மரம் தலவிருட்சமாதலாலும் மூலவர் 'மல்லிகார்ஜுனர்' என்று அழைக்கப்படுகின்றார். ஆவுடை கிடையாது. சிறிய பாணம் மட்டும் இருக்கும்.
அம்பிகை 'பிரம்மராம்பிகை' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றார். 51 சக்தி பீடங்களில் இத்தலமும் ஒன்று. தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த இடமாகும். சுவாமி சன்னதியைவிட அம்பாள் சன்னதி 30 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
சிலாத மகரிஷி வழிபட்டதால் இத்தலம் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுகிறது. அவரது மகனான நந்தியம்பெருமான் இங்கு தவம் செய்து இறைவனை சுமக்கும் பாக்கியம் பெற்றார் என்றும் நந்தி தேவரே இங்கு மலையாக இருந்து பெருமானைத் தாங்குகிறார் என்றும் தல புராணம் கூறுகிறது. ஸ்ரீசைல சிகரத்தை தரிசித்தால் மறுபிறப்பு இல்லை என்பது ஐதீகம்.
பிரகாரத்தில் முருகப் பெருமான் ஆறுமுகங்களுடன் காட்சி அளிக்கின்றார். பளிங்குக் கல்லால் ஆன சன்னதி. இவரை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
இத்தலத்தில் இரண்டு தலவிருட்சங்கள் உள்ளன. ஒன்று அர்ஜுன மரம் என்று அழைக்கப்படும் மருத மரம். மற்றொன்று திரிபலா மரம். மேதி, ரவி, ஜுவி என்னும் மூன்று மரங்கள் சேர்ந்ததே திரிபலா மரம். இதனடியில் தத்தாத்ரேயர் தவம் செய்ததால் இது 'தத்தாத்ரேய மரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
பன்னிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஸ்ரீசைலம், திருக்கேதாரம், இராமேஸ்வரம் ஆகிய மூன்று தலங்கள் மட்டுமே பாடல் பெற்ற தலங்களாகும்.
கோயிலில் இருந்து சிறிது தொலைவு சென்றால் நாகார்ஜுன சாகர் அணையைக் காணலாம். கீழே கிருஷ்ணா நதி ஓடுகிறது. இது பாதாள கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோயிலில் பஞ்ச பாண்டவர்கள் கட்டியதாகக் கூறப்படு ஆறு சன்னதிகள் உள்ளன. மராட்டிய மன்னன் சிவாஜி இத்தலத்திற்கு வந்து வழிபட்டு அம்பிகையிடம் இருந்து வாள் பெற்று எதிரிகளை அழித்து போரில் வெற்றி பெற்றார். அதனால் பிரம்மராம்பிகை அம்மன் கோயிலின் வடக்கு கோபுரத்தைக் கட்டிக் கொடுத்தார். அதனால் இந்தக் கோபுரம் சிவாஜி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. அம்பாள் சிவாஜிக்குக் கொடுத்த வாள் இன்றும் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் மன்னர் சிவாஜிக்கு சிலை ஒன்றும் உள்ளது.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகியோர் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.
|